மொட்டு’ – ‘கை’ கூட்டு கேள்விக்குறி
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீள்பரிசீலனை செய்யலாம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பல தன்னிச்சையான தீர்மானங்கள் எடுத்துள்ளது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் பொதுஜன முன்னணியின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் பங்களிப்பு செய்தனர். எனினும், சுதந்திரக் கட்சிக்குப் போதுமான தேசியப்பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படவில்லை.
பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாமல் அரசால் தேசியப் பட்டியல் ஆசனங்கள் தீர்மானிக்கப்பட்டன. பொதுத்தேர்தலின் பின்னர் நியமனங்கள் வழங்கப்பட்ட வேளை பல பங்காளிக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன.
சுதந்திரக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பொதுஜன முன்னணி தொடர்ந்தும் புறக்கணித்தார் கூட்டணியைத் தொடர்வதா எனச் சிந்திக்க வேண்டியிருக்கும்” – என்றார்.