என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! – தேர்தல் ஆணைக்குழு தலைவர் விரக்தி.
“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நிதி அமைச்சும், நாடாளுமன்றமும் செயற்படும் என்று நாம் நினைக்கின்றோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்கவும் முடியாது. மக்களின் ஜனநாயக உரிமைக்கு எவரும் குந்தகம் விளைவிக்கவும் முடியாது. இவற்றை மீறி என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”
இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.