தமிழ்நாடு மேலவை சட்ட ரத்து மசோதா… குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி…!
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு இரண்டாம் அமர்வு தொடங்க உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாட்டில் சட்ட மேலவை அமைப்பதற்கான சட்டத்தை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.