டயர் வெடித்ததால் விபத்து.. சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 6 பேர் பலி.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் நேற்று அதிகாலை புல்தானா மாவட்டத்தில் உள்ள சென்காவ் நோக்கி காரில் சென்றனர். காரில் இரு குடும்பத்தையும் சேர்ந்த 13 பேர் இருந்தனர். காலை 8 மணியளவில் கார் மும்பை – நாக்பூர் சாம்ருத்தி சாலையில் புல்தானா மாவட்டம் சிவ்னி பிசா கிராமம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி, பல முறை பல்டி அடித்து அருகில் உள்ள சாலையில் பாய்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரமிளா (வயது45), பாக்யஸ்ரீ(27), ஷரத்தா (35), ஜான்வி(12), கிரண்(35), கவுசாபாய் (50) ஆகிய 6 பேர் பலியானது தெரியவந்தது.
பலியானவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த மற்ற 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், டயர் வெடித்ததால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்து உள்ளது.