ஆர்ப்பாட்டக்காரர்களோடு இணைந்து காடையர்களும் களமிறக்கம்! – இப்படிச் சொல்கின்றார் ரணில்.
“ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சில காடையர்களும் மறைந்திருந்து செயற்படுகின்றார்கள். அந்தக் காடையர்களும் அவர்களுக்கு உதவி புரிபவர்களுமே அரசு மீதும், பொலிஸார் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஆனால், உண்மை நிலைமை மக்களுக்குப் புரியும்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களின்போது காலாவதியான கண்ணீர்ப்புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், மலக்கழிவு நீரைப் பயன்படுத்தியே போராட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை உத்தரவுகளை மீறிச் செயற்படும் போதும், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடும் போதும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்கும் முழுச் சுதந்திரம் பொலிஸாருக்கு உண்டு. அதற்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியாது.
பொலிஸாரின் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் சில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கின்றேன்” – என்றார்.