யாழில் ஒரே நாளில் திருடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீட்பு!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சுன்னாகம் பொலிஸாரால் உடுவில் பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று யாழ். பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
நாச்சிமார் கோவில் பகுதியிலுள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்றுமுன்தினம் திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சுன்னாகம் பொலிஸாரால் உடுவில் பகுதியில் இலக்கத் தகடு அற்றநிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் நேற்று மீட்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் தப்பி ஓடியுள்ளார்.
இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்திச் செல்வதை அவதானித்த சுன்னாகம் பொலிஸார், அவரைப் பின்தொடர்ந்து சென்ற போது சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் நேற்று மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார். அதையடுத்து யாழ். பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக மோட்டார் சைக்கிள்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அன்றைய தினம் யாழ். குடாநாட்டில் மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவை இன்னமும் பொலிஸாரிடம் சிக்கவில்லை. தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது.