அனைத்துப் பல்கலைக்கழக ஒன்றியத்தினருக்கு உரிய பதிலளித்த யாழ். பல்கலை மாணவர்களுக்குப் பாராட்டு – மனோ கணேசன் எம்.பி. அறிக்கை.
“பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979இல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்குப் போய், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்க்க யாழ். பல்கலைக்கழகமும் இணைய வேண்டும்” என அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே முதலானோர் கோரியமை நகைப்புக்கு இடமானது. மறுபுறம், இத்தகையை கோரிக்கைக்கு “இணைகின்றோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பதில் அளித்துள்ளமையைப் பாராட்டுகின்றேன்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979 இல் உருவாகிய சட்டமாகும். ஏறக்குறைய 44 வருடங்களாக நம்மைப் போட்டு பாடுபடுத்தும் சட்டம். இதை எதிர்கொண்டு, நம்மில் எத்தனையோ பேர் மாண்டு போனோம். இன்னும் எத்தனையோ பேர் சிறையில் வாழ்வை இழந்தோம். இன்னும் இழந்தபடி இருக்கின்றோம். எத்தனையோ குடும்பங்கள் அநாதரவாக வாடுகின்றன.
2006 முதல் 2009 வரை கொழும்பு மாநகரில் இந்தச் சட்டத்தைக் காட்டி வெள்ளை வானில், தமிழரை நாய் பிடிப்பதைப் போல் கடத்திக்கொண்டு போனார்கள். அதை எதிர்த்துப் போராடிய என்னையும் 2007ஆம் ஆண்டு ஒருமுறை கைது செய்தார்கள். கொலை செய்ய முயன்றார்கள்.
தமிழர்கள் 40 வருடங்களுக்கு மேல் தேசிய, சர்வதேச ரீதியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் அது இன்று, ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கும் வந்துள்ளது.
இப்போது, கடந்த சில மாதங்களில், வசந்த முதலிகே, சிறி தம்ம தேரர் போன்ற சில தென்னிலங்கை சிங்கள போராளிகளை இந்தச் சட்டம் பதம் பார்க்கும் போது, திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்குப் போய், அங்கே யாழ். பல்கலை இளம் பசங்களிடம், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து நாம் போராடுகிறோம். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்” எனக் கோருவது, 2023 இன் மிக சிறந்த நகைச்சுவையாகத் தோன்றுகின்றது.
ஆனால், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு, யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய இளைஞர்கள் சரியாகப் பதில் கூறியுள்ளார்கள் என நான் அறிகின்றேன். யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்துக்கு என் பாராட்டுகள்.
இதைத்தான், சமீபத்தில் நடந்து முடிந்த காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் என்னை வந்து சந்தித்த, அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சிங்களப் போராளிகளிடமும், அவர்கள் கொழும்பில் நடத்திய கூட்டங்களிலும் சிங்கள மொழியில் நான் சொன்னேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வரலாற்றைத் தெரிந்துக்கொண்டு, சிறைக் கூடங்களில் இருக்கும் நம்மவருக்காகவும் போராடத் தயார் என்றால், கசப்பான கடந்த காலத்தை மறந்து விட்டு கரம் கோர்க்கத் தயார் என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்.
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பொதுப் போராட்டத்தில் இணைந்துக்கொள்ள சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள மாணவர் இளைஞர் அமைப்புகள் தயாராகாதவரை இந்த நாடு விடிவு பெறாது” – என்றுள்ளது.