2024 நவம்பருக்குப் பின்பே ஜனாதிபதித் தேர்தல்! – அதற்கு முன் சட்டத்தில் இடமில்லை என்று வல்லுநர்கள் கருத்து.
ஜனாதிபதித் தேர்தல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்துவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்காகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கப்படுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
“2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள். ஆனால், அவர் தனது பதவிக் காலத்தின் 4 ஆண்டுகள் முடிவில் அதாவது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதற்கான அறிவிப்பை விடுத்திருக்க முடியும்.
ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக பதவி விலகியமையால் நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது. ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபயவின் எஞ்சிய பதவிக் காலம்வரை – 2024ஆம் ஆண்டு நவம்பர் வரையில் பதவியிலிருக்க வேண்டும். அதற்கு முன்னர் அவர் பதவி துறந்தால் நாடாளுமன்றம் மீண்டும் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவேண்டும்.
எனவே 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை” – என்று துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.