இளைய தலைமுறையினர் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற பிரிட்ஜ் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, “நமது அன்றாட தேவையில் ஒன்றாக செல்போன், கணினி, இன்டெர்நெட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன. ஒரு குடையின் கீழ் உலகம் வந்துவிட்டது. கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் முக்கியமாக உள்ளது. விரல் நுனியில் கல்வி கிடைக்கிறது , வகுப்பறைகள் நவீனமாகி , புத்தகங்கள் எளிதில் கிடைக்கின்றன.
மாணவர்கள் அறிவோடும் அறிவியலோடும் கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில்நுட்பங்கள் மூலம் மருத்துவத் துறையில் அனைத்தும் எளிமையாகி இருக்கிறது , இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து பாதுகாக்க உதவுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார் கருணாநிதி” என்று கூறினார்.
எல்லாவற்றிலும் இரு பக்கம் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர், “இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், தொழில்நுட்பங்களுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது. வதந்தி பரப்பி , சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் கட்சிகள் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் கனவாக நினைத்ததெல்லாம் உண்மையாகி வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுகள் மனித உயிர்களை பலிவாங்கி வருகிறது. இதனால் கவனமுடன் கையாள வேண்டும்” என வலியுறுத்தினார்.