நாடு தழுவிய நாளைய மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு எல்லாம் தயார்!

நாளை மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு எல்லாம் தயார்! ஜூலை 80 வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு நடந்தது மீண்டும் நடக்கலாம் என்று அரசாங்கம் சூசகமாக தெரிவித்துள்ளது…

வேலை நிறுத்தம் செய்வோரது சொத்துக்களைப் பறிமுதல் செய்வது எனும் வஜிரவின் கதையை நீட்டித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவோர் துரோகிகளாக தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்!

தற்போதைய அரசாங்கம் பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகள் என பெயரிட்டுள்ளதுடன் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் தேசத்துரோகச் செயலாகக் கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கெபினட் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை ஆரம்பிக்கவுள்ள பாரிய வேலைநிறுத்தம் குறித்து அரசாங்க தரப்பில் எச்சரித்த அமைச்சரவை பேச்சாளர், நாட்டிற்கு தேவையான நீடிக்கப்பட்ட நிதி வசதி குறித்து முடிவெடுக்க எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்களின் கூட்டத்தை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, ​​அரசாங்கம் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளது, அதை மீறினால், தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் பிரகாரம், அந்த சேவைகளை மீறுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும், சட்டங்கள் வலுவாக உள்ளதாக அரசாங்கம் சார்பில் அறிக்கையொன்றை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையானது இன்று (14) ஐந்து மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டு நாளை (15) நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை (15) மேற்கொள்ளவுள்ள மருத்துவப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி நாளை (15) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (14ம் திகதி) பிற்பகல் 4 மணி முதல் ஊழியர்கள் கடமையில் இருந்து வெளியேறவுள்ளனர்.

மற்றுமொரு அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ரயில்வேயின் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் 24 மணிநேர வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் இறங்குகிறார்கள்.

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் FUTA உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் குமார பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவும் நாளை 15ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களும் நாளை (15) நடைபெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (15) அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களும் சுகயீனமடைந்துள்ளதாக அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்க இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

CEB பொறியியலாளர்கள் இன்று (14) முதல் ஒரு வாரத்திற்கு சட்டப்படியான பணியில் இருப்பார்கள் மற்றும் அவர்கள் சுகயீன விடுமுறைக்கு செல்வார்கள் என CEB பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் புத்திக விஜயவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.