ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி.மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்‼️
“தச்சுத் தொழிலாளர்களின் இசை கேட்டு வளர்ந்தேன், இதே இப்போது ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்” என்று ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இயற்பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி என்பதாகும்.
அவரது தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியராக இருந்தவர். கீரவாணி இசையின் மீதான காதலால் தனக்கு அந்த பெயரையே தந்தை சூட்டிவிட்டதாக எம்.எம்.கீரவாணி பல நேர்காணல்களில் கூறியுள்ளார். தந்தையால் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், 2 ஆண்டுகளில் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்ததன் மூலம் சினிமா வாழ்க்கையை கீரவாணி தொடங்கினார்.1990-ல் ‘கல்கி’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை.
அதே ஆண்டு மெளலி இயக்கத்தில் வெளியான ‘மனசு மகாத்மா’ என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது. எம்.எம். கீரவாணியின் திரையுலக பயணத்தில் 1991-ம் ஆண்டு முக்கியமான ஒன்றாக அமைந்தது.
அந்த ஆணடு வெளியான ‘சீதாராமையா காரி மனவராலு’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஷனா ஷனம்’ என்ற திரைப்படத்தின் மூலம் எம்.எம்.கீரவாணி பெரும் புகழை அடைந்தார்.
அதன் பிறகு அவரது திரைப்பயணத்தில் தொடர்ந்து ஏறுமுகம்தான். தெலுங்கு திரைப்பட இசையுலகின் அசைக்க முடியாத மன்னராக அன்று முதல் அவரே திகழ்கிறார்.
மெலடி இசையே ரசிகர்களை கவரும், மெலடி பாடல்களே வெற்றிபெறும் சாத்தியங்கள் கொண்டவை என்று ஒரு நேர்காணலில் கீரவாணி குறிப்பிட்டார்.
துள்ளல் இசைப் பாடல்கள் நடனம், துடிப்பான இசை மூலம் வெற்றியடைகின்றன, ஆனால் மெலடிப் பாடல்களோ ரசிகர்களின் இதயத்தை வெல்கின்றன என்பது அவரது கருத்து.
தெலுங்கு, தமிழ், இந்தியில் அவரது இசையில் வெளியான பல பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவை.
ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி
பட மூலாதாரம்,MMKEERAVANI/FACEBOOK
படக்குறிப்பு, தெலுங்கு பின்னணி பாடகர்களுடன் எம்.எம்.கீரவாணி
தமிழில் மரகதமணி என்ற பெயரில்…
1990-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது ‘அழகன்’ படத்தின் மூலம் தமிழில் கீரவாணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’, ‘சாதி மல்லி பூச்சரமே’ போன்ற காதல் மெலடி பாடல்கள் ரசிகர்களிடையே இன்றும் முணுமுணுக்கப்படுகின்றன.
‘துடிக்கிறதே நெஞ்சம்’ என்ற துள்ளல் இசைப்பாடல், ‘கோழி கூவும் நேரம் ஆச்சு’ என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.
அதுமுதல் சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக மரகதமணி திகழ்ந்தார். 1992-ல் பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்திலும் இவர் கொடுத்த அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன.
பாலச்சந்தர் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் ‘நீ பாதி நான் பாதி’ படத்துக்கும், பாலச்சந்தர் இயக்கிய ‘ஜாதி மல்லி’ ஆகிய படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார். அர்ஜுன் நடித்து இயக்கிய ‘சேவகன்’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘கொண்டாட்டம்’ ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி – ஸ்ரீதேவி நடித்த ‘தேவராகம்’ படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன.
தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘மாவீரன்’, ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழில் 2k கிட்ஸ்கள் மத்தியில் அவர் அதிக பிரபலமடைந்தார்.
தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் வெளிப்பட்ட இவர் பாலிவுட்டில் க்ரீம் என்ற பெயரில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 1994-ம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் இந்தியில் அவர் அறிமுகமானார்.
2002-ம் ஆண்டில் வெளியான சர்தி மெலடி ஆஃப் லைஃப் திரைப்படம் இவரை இந்தி ரசிகர்களிடையே வெகுவாக கொண்டு சேர்த்தது.
அந்த படத்தில் இடம் பெற்ற அபிஜா… அபிஜா… என்ற பாடல் வட மாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
இந்திய திரையுலகில் மாபெரும் இயக்குநராக உருவெடுத்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலியின் அனைத்துப் படங்களுக்கும் எம்.எம்.கீரவாணியே இசையமைத்துள்ளார். இருவருமே நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
அதாவது, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும், கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தாவும் சகோதரர்கள். 2001-ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ்.ராஜமௌலியின் தொடர் வெற்றிகளில் எம்.எம்.கீரவாணியும் இணைந்தே பயணப்பட்டார்.
மகாதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 என இருவரது கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தெலுங்கு திரைப்பட இசையுலகில் இன்று முடிசூடா மன்னனாக திகழும் எம்.எம்.கீரவாணிக்கு சிறப்பான இசைத் திறமைக்காக விருது கொடுத்து முதலில் கௌரவித்தது தமிழ்நாடுதான். 1991-ம் ஆண்டு அழகன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.
1997-ம் ஆணடு அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த இசைக்காக, ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 11 முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை 13 முறையும் அவர் வென்றிருக்கிறார்.
பாகுபலி-2 திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி, தற்போது அதே பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் இசை பிரிவில் ஆஸ்கரையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.