சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டும் தம்பதி.
நிதி சிங் என்பவரும் அவருடைய கணவர் ஷிகர் வீர் சிங்கும் நன்கு கல்வி பயின்ற இரு நிபுணர்களாவர். கைநிறைய சம்பளம் வழங்கும் வேலைகளில் அவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
ஆனால், சமோசா விற்கத் தொடங்கிய அத்தம்பதி, தாங்கள் பெற்ற சம்பளத்தைவிட இப்போது கூடுதலாக சம்பாதிக்கின்றனர்.
நிதியும் ஷிகரும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது தங்களுடைய தொழில் அடுத்தகட்டத்திற்குச் செல்வது குறித்து அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நிதியும் ஷிகரும் முதன்முறையாக சந்தித்தனர். அப்போது உயிர் தொழில்நுட்பத் துறையில் இளநிலைப் பட்டக்கல்வி பயின்றுகொண்டு இருந்தனர்.
ஷிகர் பின்னர் ஹைதராபாத்தில் முதுநிலைப் பட்டக்கல்வியைப் பயின்றார். 2015ல் வேலையைவிட்டு விலகியபோது, ‘பயோகான்’ எனும் நிறுவனத்தில் முதன்மை அறிவியலாளராக அவர் இருந்தார்.
நிதி மேற்கொண்ட பயணமோ வேறு. குருகிராமில் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஆண்டு சம்பளமாக ரூ.30 லட்சம் பெற்று வந்தார்.
2015ல் தங்கள் வேலைகளைவிட்டு விலகிய அத்தம்பதியர், அடுத்த ஆண்டு பெங்களூரில் ‘சமோசா சிங்’ எனும் தொழிலைத் தொடங்கினர்.
நிதி, ஷிகர் இருவரும் வசதி வாய்ப்புடைய பின்னணியிலிருந்து வந்தவர்கள். நிதியின் தந்தை ஒரு வழக்கறிஞர். ஷிகரின் தந்தை சொந்தமாக நகைக்கடைகளை வைத்துள்ளார்.
இந்நிலையில், சொந்தமாக தொழில் தொடங்க விரும்பிய நிதி-ஷிகர் தம்பதியர், தங்களது சேமிப்புகளைக் கொண்ட ‘சமோசா சிங்’கை தொடங்கினர்.
சமையலறைக்குப் பெரிய இடம் தேவைப்பட்டதால் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பை அவர்கள் ரூ.80 லட்சத்துக்கு விற்றனர். ஆனால் அந்த வீட்டில் அவர்கள் ஒரு நாள் மட்டுமே தங்கியிருந்தனர்.
வீட்டை விற்று கைக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு பெங்களூரில் ஒரு தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்தனர்.
நிதி, ஷிகர் நம்பியது போலவே அவர்களது தொழில் வேகமாக வளர்ச்சியடைந்தது. மாதத்திற்கு 30,000 சமோசாக்களை அவர்கள் விற்கின்றனர். அத்தம்பதியரின் மாத வருவாய் ரூ.45 கோடி என ஊடகத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது. அப்படியென்றால், நாள் ஒன்றுக்கு அவர்கள் கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் சம்பாதிக்கின்றனர்.
ஷிகர் படித்துக்கொண்டு இருந்தபோது சமோசா விற்பனை குறித்த யோசனை அவருக்குத் தோன்றியது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளைகளுக்கு வெளியே சமோசா விற்க அவர் விரும்பினார். ஆனால், அறிவியலாளராவதில் கவனம் செலுத்தும்படி ஷிகருக்கு நிதி அறிவுறுத்தினார்.
எனினும், ஒரு நாள் உணவுக்கூடத்தில் சமோசா கேட்டு சிறுவன் ஒருவன் அழுவதைக் கண்ட ஷிகர், சமோசா விற்கும் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார்.
பின்னர் தங்கள் உணவுப் பட்டியலில் புத்தாக்கமிக்க சமோசாக்களை இருவரும் அறிமுகப்படுத்தினர். அவற்றில் ‘பட்டர் சிக்கன்’, கடாய் பன்னீர் சமோசாக்கள் மிகவும் பிரபலமானவை.
இப்போது தங்கள் தொழிலை விரிவுபடுத்த ஷிகர்-நிதி தம்பதியர் திட்டமிடுகின்றனர்.