வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய அனுமதி; ஆனால் நீதிமன்றங்களில் அனுமதி இல்லை
இந்திய பார் கவுன்சில் (BCI) வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களை பரஸ்பர அடிப்படையில் இந்தியாவில் சட்டப் பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. இதற்காக இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள், 2022 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எப்படி வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வேலை செய்ய முடியும் ? அந்த சட்டம் வேறு, இந்திய சட்டம் வேறு என்று தானே யோசிக்கிறீர்கள். வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு இந்தியாவில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடும் உரிமை கிடையாது. அது இந்திய வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
விதிகளின் படி, பதிவுசெய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு வழக்கறிஞர் இந்தியாவில் வழக்கு அல்லாத விஷயங்களில் மட்டுமே வழக்கறிஞராக பணியாற்ற தகுதியுடையவர். வெளிநாட்டு வழக்கறிஞர்கள், மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில், சர்வதேச அளவிலான இந்தியாவின் பரிவர்த்தனைகள், கார்ப்பரேட் நிறுவன பிரச்சனைகள் போன்றவற்றில் பரஸ்பர அடிப்படையில் இருத்து உதவிகளை மட்டுமே வழங்க முடியும்.
வெளிநாட்டில் சட்டம் படித்த ஒரு நபர் அதே நாட்டில் சட்டம் பயிற்சி செய்ய தகுதியும் அனுமதியும் பெற்றிருந்தால் அவர் இந்திய பார் கவுன்சிலில் தனது பெயரை பதிவு செய்துகொள்ள தகுதி பெறுவார். ஒரு வெளிநாட்டு வழக்கறிஞரின் பதிவுக் கட்டணம் $25,000, ஒரு சட்ட நிறுவனத்திற்கு $50,000 என்ற கட்டணத்தை பார் கவுன்சில் நிர்ணயித்துள்ளது. வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அல்லது நிறுவனங்கள் BCI இல் பதிவு செய்யாமல் இந்தியாவில் பயிற்சி செய்ய முடியாது
வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அல்லது வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் எந்த நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது பிற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளின் முன் ஆஜராக அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்டு முயற்சிகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்தங்களின் வரைவு மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் போன்ற பரிவர்த்தனை வேலை/கார்ப்பரேட் வேலைகளில் ‘ஆலோசகராக’ மட்டும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த விதிகள், நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றுவது பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்ய உதவும். அதோடு சர்வதேச சிக்கல்களை கையாள்வதற்கான திட்டங்களை வகுக்க உதவும். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கு இணங்க சட்டங்களை உருவாக்க இந்த சட்ட சகோதரத்துவம் உதவும் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு வழக்கறிஞர் அல்லது சட்ட நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சட்டம் குறித்து ஆலோசனை வழங்க ‘ஃப்ளை இன் அண்ட் ஃப்ளை அவுட்’ அடிப்படையில் பணிபுரிந்தால், பரஸ்பர விதி பொருந்தாது. அதாவது, 2015 ஆண்டு உச்ச நீதிமன்ற விளக்கப்படி, வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சர்வதேச வர்த்தக நடுவர் மன்றத்தில் ஆலோசகராக ஈடுபட மட்டும் வந்து இருந்தால் இது பொருந்தாது.
இதே கட்டுப்பாடுகள் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுடன் பணிபுரியும் இந்திய வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். மேலும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான நடைமுறைகள் அல்லது சட்டம் தேவை பட்டால், இந்திய அரசு அல்லது சட்டம் மற்றும் நீதி அமைச்சத்துடன் இணைந்து அதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.