உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்ட்டுள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரெயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.