ஸ்ரீ ரங்கா களுபோவில வைத்தியசாலையில் வைத்து பொலிஸாரால் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஸ்ரீ ரங்கா இன்று (17) மாலை களுபோவில வைத்தியசாலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் மீண்டும் சாட்சிகளை அச்சுறுத்தியதாக தெரியவந்ததையடுத்து, முன்னாள் எம்.பி.யை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இன்று (17) பிடியாணை பிறப்பித்திருந்தார்.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வவுனியா, செட்டிகுளம் பகுதியில் ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற அவருக்கு சொந்தமான , பதிவு செய்யப்படாத அவரது வாகனம் செட்டிகுளம் வைத்தியசாலையில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவரைப் பாதுகாத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட், நவத்தல்வத்தை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சார்ஜன்ட் உதய புஷ்பகுமார மரணமடைந்தார்
அப்போது வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன், வாகனத்தை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் என்ற தகவலை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா நீதிமன்றில் முன்வைத்து சம்பவத்தை பார்த்த மக்கள் குழுவை அச்சுறுத்தினார். .
இது தொடர்பாக மீண்டும் ஒருமுறை எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, விபத்து ஏற்படும் போது வாகனத்தை ஓட்டி வந்தவர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா என்பது தெரியவந்தது.
இதனடிப்படையில் ஸ்ரீ ரங்கா மற்றும் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த அதிகாரி உட்பட நால்வருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாட்சியங்களை மறைத்தமை, தவறான தகவல்களை வழங்குதல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குறித்த வழக்கு 03/17/2023 அன்று வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா நீதிமன்றில் ஆஜராகாததுடன், குறித்த வழக்கின் சாட்சிகளை மீண்டும் அச்சுறுத்தியமை தெரியவந்தவுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.