ஆஸ்கார் விருதுக்கு பின் நள்ளிரவில் ஐதராபாத் திரும்பிய நடிகர் ராம்சரண்; மலர் தூவி உற்சாக வரவேற்பு.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு… நாட்டு… பாடலுக்கு கிடைத்தது.
இதேபோன்று, சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படம் ஆஸ்கார் விருது வென்றது. இதனால், இந்த முறை இந்திய திரை துறைக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்து உள்ளன.
இதனை தொடர்ந்து, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் நாடு திரும்பினர். இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி ரமா, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு நேற்று காலை திரும்பினர்.
எனினும், ஆர்.ஆர்.ஆர். படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்த நடிகர் ராம்சரண் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை வந்திறங்கினார். அவர் வந்தபோது, ரசிகர்களின் கூச்சல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, டெல்லியிலேயே அவர் தங்கினார்.
இதன்பின்பு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோர் சந்தித்தனர்.
இதுபற்றி மந்திரி அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்.ஆர்.ஆர். படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது ஆகியவற்றுக்காக ராம்சரணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன் என கூறினார்.
அதன்பின்பு நேற்றிரவு வரை டெல்லியிலேயே தங்கிய நடிகர் ராம்சரண், அதன்பின்பு நள்ளிரவில் ஐதராபாத் நகருக்கு வந்து சேர்ந்து உள்ளார்.
அவரை காணவும், வரவேற்கவும் அவரது ரசிகர்கள் திரண்டு வந்து இருந்தனர். திறந்த நிலையிலான காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தபடியே வந்த அவர் மீது ரசிகர்கள் சார்பில் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
#WATCH | Telangana | RRR fame actor Ram Charan received a warm welcome as he arrived in Hyderabad last night
'Naatu Naatu' song from RRR won the Best Original Song award at #Oscars2023 pic.twitter.com/8nD8cFFoOt
— ANI (@ANI) March 18, 2023