கோட்டாவைப் போல ரணிலையும் விரட்டி, சஜித்தை ஜனாதிபதியாக்கியே தீருவோம்! – ஹிருணிகா சபதம்.
“ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
தலவாக்கலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது. ஏனெனில் தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலைப் பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.
தேர்தல் இல்லை என்பதற்காக நாம் ஒரு அடியேனும் பின்வாங்கிவிடக்கூடாது. அவ்வாறு நடந்தால் ஏனைய கட்சிகள் இரு அடி முன்நோக்கி நகரக்கூடும். எமது பிரசாரத்தைத் தொடர வேண்டும். நாளொன்றுக்கு 5 புதிய வாக்காளர்களையாவது நாம் எமது பக்கம் இழுக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க எந்நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் என்றும் தெரியாது. சிலவேளை அவசர தேர்தலொன்றுக்குச் செல்லலாம். தேர்தல் இல்லையென நாம் ஒதுங்கியிருந்தால் அவ்வேளையில் எமக்குச் சிக்கல் ஏற்படும். எனவேதான் தயார் நிலையில் இருக்குமாறு கோருகின்றேன்.
ரணில் விக்கிரமசிங்கவை தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பினர். ஆனால் ராஜபக்சக்களை காப்பாற்றப்போய் அவர் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். தற்போது மக்கள் மனம் வென்ற ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸதான். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. வாங்கும் சம்பளத்தை மக்களுக்கே வழங்கி வருகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட பெண்களே விரட்டினர். ரணிலையும் விரட்டுவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதிக் கதிரையில் பெண்கள் சக்தியே அமர வைக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.