வங்கிக்கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி சொன்ன நிதியமைச்சர்..!
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பத்திரப்பதிவுத் துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், வெளிச்சந்தைகளில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்த கோரிக்கைகள் எழுந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதனை ஏற்று நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் திருத்தங்கள் பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கையை பெறும் வரை, வழிகாட்டி மதிப்பை 2017 ஜூன் 8ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டதற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதன்படி, சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி, 2 சதவீத பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, வங்கிக்கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.