நடன இயக்குனர் கலாவின் கலைப்பயணம்: மீனா ஒரு கற்பூரம் மாதிரி …
மீனாம்மா… மீனா அம்மா… மீனாவும் சரி! மீனாவின் அம்மாவும் சரி! இருவருமே வார்த்தையால் விவரிக்க முடியாத பொக்கிஷங்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தையும், தனி முத்திரையையும் பதித்து வைத்திருப்பவர் மீனா. குழந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கைகளை பற்றிக் கொண்டு நடந்தவள். 40 ஆண்டு காலம் திரை உலகை ஆண்ட மீனா(ட்சி)! நான் கண்டது 1995-களில் தான். அப்போது சின்ன பொண்ணு. துறுதுறுவென்று ஓடி கொண்டிருப்பாள். `நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற படத்தில்தான் முதல் முறையாக மீனாவுக்கு நான் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன்.
என்னைப்பற்றி மீனாவிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள். `கலா கடினமான ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்து பிழிந்துவிடுவார் என்று. இதனால் பயந்து பயந்தே வந்திருக்கிறார். இது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரே ஒரு பேட்டியில் சொன்னபோதுதான் எனக்கு தெரியவந்தது. உண்மையில் மீனா கற்பூரம் போன்றவர். எப்படி சொல்லிக் கொடுத்தாலும் சரி. உடனே கப்பென்று பிடித்துக் கொள்வார். “அந்த வானம் விட்டு வந்த வெண்ணிலவும் நீதானா? என் வாசல் தேடி வந்த தேவதையும் நீ தானா” என்ற பாடலிலும் “மின்னுது மின்னுது பொன்னிலும் மின்னு” என்ற பாடலிலும் டான்ஸ் நிறைய இருக்கும்.
நான் சொல்லிக் கொடுத்த அசைவுகளை அப்படியே செய்து முரளியுடன் டூயட் பாடல்களில் பிரமாண்டமாக ஆடியிருப்பார். இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். மீனாவுடன் நிறைய கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடத்தி இருக்கிறேன். அந்த காலத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியெல்லாம் கிடையாது. எப்படி ஆட வேண்டும் என்பதை ஆடி காமிராவில் பதிவு செய்து கொடுப்பேன். அதை பார்த்தே ஆடி விடுவார். 2000-ம் ஆண்டில் ஜப்பானில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். அந்த நாட்டில் ரஜினி-மீனா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே மீனாவும் பங்கு பெற்றால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் அவரையும் அழைத்தேன். மறுப்பு சொல்லாமல் ஒத்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை ஜப்பான் பிரதமர் தொடங்கி வைத்தார். எனவே நிகழ்ச்சியில் எந்த சொதப்பலும் வந்துவிடக் கூடாது என்ற டென்சன். மீனா நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு தான் ஜப்பான் வந்து சேர்ந்தார். அவசர அவசரமாக புறப்பட்டு வந்ததில் அவரது `காஸ்ட்யூம்ஸ்’ எல்லாம் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அவசர அவசரமாக சிலவற்றை வாங்கினோம். அவ்வளவுதான். ஒத்திகை பார்ப்பதற்கு கூட நேரமில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மேடையின் பின்புறம் நின்று சில நடன அசைவுகளை மீனாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவ்வளவுதான்.
மேடையில் அற்புதமாக ஆடி ரசிகர்களை கிறங்க வைத்துவிட்டாள் என்றால் பாருங்கள். அதுதான் மீனா. முதல் படம் முடிந்ததுமே கலான்னா பயப்பட வேண்டியதில்லை என்று நெருங்கி பழகினார். அதன்பிறகு எனது சகோதரிகளில் ஒருவர் போலவே மாறிவிட்டார். மீனாவைவிட மீனாவின் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா-மகள் போன்ற உறவு இன்று வரை எங்களுக்குள் நீடிக்கிறது. ஒரு நல்ல அம்மாவாக மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். மிகவும் கண்டிப்பானவர். அதேநேரம் மிகவும் பாசம் காட்டக்கூடியவர். மீனாவை பொறுத்தவரை அவரது கண்களும், சிரிப்பும் அவரது இயல்பான நளினத்துக்கு கூடுதல் அழகு சேர்க்கும். தமிழில் சில படங்கள்தான், மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த படங்கள், தெலுங்கில் நாட்டாமை உள்பட பல படங்களுக்கு அவருக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறேன்.
மீனாவுடனான எனது பயணம் ஒவ்வொன்றும் இனிமையானது. ஒருமுறை குற்றாலத்தில் ஷூட்டிங். மாலையில் ஐந்தருவிக்கு செல்ல அவருக்கு ஆசை. அக்கா வாங்க போகலாம் என்றார். எனக்கு கொஞ்சம் பயம். ஆனால் அவர் தைரியமாக புறப்பட்டுவிட்டார். மீனா, அவரது அம்மா, நான் மூன்று பேரும் அருவியின் அருகே மரங்களிடையே ஒரு இடத்தில் அமர்ந்து நொறுக்கு தீனிகளை சாப்பிட்டபடியே அருவியின் அழகை பார்த்து ரசித்தோம். கூட்டம்தான் இல்லையே அருவியில் ஜாலியாக குளிக்கலாம் என்றவர் கடகடவென்று ஓடி அருவி நீருக்குள் புகுந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டு திரும்பினார். நல்ல வேளை. முகத்தை மூடியிருந்ததால் யாரும் அடையாளம் காணவில்லை. `நுங்கு’ என்றால் மீனாவுக்கு ரொம்ப பிடிக்கும். குற்றாலத்துக்கு சென்றால் போதும். நுங்கை பார்த்துவிட்டால் எல்லோரும் வாங்கி சாப்பிடாமல் திரும்ப மாட்டோம்.
அதேபோல் ஓய்வு கிடைத்தால் போதும் திருப்பதிக்கு நடந்தே செல்வோம். சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தெலுங்கில் படமாக்கப்பட்டது. அந்த படத்தில் சிரஞ்சீவிக்கு மீனா ஜோடி. படப்பிடிப்பு கேரளாவில் மூணாறில் நடந்தது. கேரளாவில் மீனாவுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம். படப்பிடிப்புக்கு மீனா வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் பெரும் கூட்டம் திரண்டு விட்டது. காட்சிகளை படமாக்க முடியாமல் படக்குழுவினர் சிரமப்பட்டார்கள். ரசிகர்களால் தொந்தரவு வருமோ என்று கலைஞர்கள் பயப்பட்டார்கள். ஆனால் மீனா ரசிகர்களை கண்டு பயப்படவில்லை. `அவரின் அம்மாத்தான் பார்த்துக்கோடி கூட்டத்தில் மாட்டிக்கிடாதே’ என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் மீனாவோ `என்மீது பாசம் வைத்திருக்கும் எனது ரசிகர்கள்மா… அவர்களால் எந்த பிரச்சினையும் வராது’ என்று அசால்ட்டாக கூறினார். அதுமாதிரியே ரசிகர்கள் கூட்டத்தில் சென்று கையெடுத்து கும்பிட்டும், டாட்டா காட்டியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எல்லை மீறி தொல்லை கொடுப்பார்கள் என்று நினைத்த ரசிகர்களிடம் அன்பையும், பாராட்டையும் பெற்றார். கலை நிகழ்ச்சிகளில் 3 முதல் 3½ மணி நேரம் மேக்-அப்பில் புத்துணர்ச்சியோடு நடிக்க வேண்டும். களைப்பு தெரியாமல் இருக்க தயிர்சாதத்தையும், ஊறுகாயையும் அவ்வப்போது ஒரு உருண்டையை கொடுப்பேன். அதை சாப்பிட்டே சமாளிப்பார். ஆனால் நிஜத்தில் மீனாவின் வாழ்க்கை சுகத்தை விட, சோகம் நிறைந்ததாக மாறி விட்டது.