தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தான் எம்.பி.,யாக உள்ள வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் குழப்பத்தில் இருப்பதாகவும், அவர்கள்தான் இந்தியா என நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி ஒரு இந்திய குடிமகனே தவிர, இந்தியாவே அவர்தான் என கூற முடியாது என்றார். இதனால், பிரதமர் குறித்தும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் விமர்சிப்பது, இந்தியாவை விமர்சிப்பது போல ஆகாது என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திரமான அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம், பாஜக தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக அவர் சாடினார். தன்னுடைய வீட்டிற்கு எத்தனை முறை காவலர்களை அனுப்பினாலும், எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், பாஜக, காவல் துறை என யாருக்கும் தான் அஞ்சப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.