புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்துவின் பெயரை நிராகரித்தார் ரணில்! – விக்கிரமரத்னவுக்குப் பதவி நீடிக்க வாய்ப்பு.
புதிய பொலிஸ்மா அதிபராக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நியமிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் செய்த பரிந்துரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவரான தென்னக்கோனை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி பரிந்துரைத்திருக்கிறார் என்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை சட்டவாளர்கள் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. முன்னுதாரணமான ஒருவரையே பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘எக்கனாமிக் நெக்ஸ்ட்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
பதவியை ”தேசபந்துவுக்கு வழங்கமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். அநேகமாக, தற்போதைய பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படவே வாய்ப்புகள் உண்டு” என்று ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசபந்து தென்னக்கோனை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக அவரது பெயரை ஜனாதிபதியிடமும் பரிந்துரைத்திருந்தார். அதனை அமைச்சரின் ஊடகங்கள் அரசமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியின் பரிந்துரை என்பதாகச் செய்திகளை வெளியிட்டு அதனை உண்மையாக்க முற்பட்டன. ஆனால், ”இந்த ஊடக பரப்புரை தென்னக்கோன் மற்றும் ரிரான் ஆகிய இருவருக்குமே கடைசியில் பாதிப்பாக முடிந்துவிட்டது” என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தனது ஓய்வு தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, ஓய்வுக்குப் பின்னர் பயணங்களிலும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதிலும் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடப் போகின்றேன் என்று தெரிவித்திருந்தாரே தவிர, பதவி நீடிப்பு வழங்குமாறு கேட்கவில்லை என்று தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள், ஆனாலும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன என்று தெரிவித்தன.