அசத்தப்போவது யாரு கோவை குணா மரணம்

திரையுலகில் அடுத்தடுத்த மரண செய்திகள் வெளிவந்து ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் உயிரிழந்த மயில்சாமியின் இறப்பு இன்னும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மற்றும் ஒரு துயர செய்தி வெளிவந்து அனைவரையும் கலங்கடித்துள்ளது.
அந்த வகையில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோவை குணா தற்போது உடல்நல குறைவால் மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் ஆவார்.
அதைத்தொடர்ந்து பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கும் இவர் நன்றாக மிமிக்ரி செய்ய கூடியவர். அதிலும் ஜனகராஜ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் போல் இவர் செய்யும் மிமிக்ரி அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் இருக்கும். இப்படி தன்னுடைய நகைச்சுவை திறமையால் அனைவரையும் கவர்ந்த இவர் சென்னை காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது 54 வயதாகும் கோவை குணா கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே இருக்கும் விநாயகபுரம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து விட்ட இவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் சமீப காலமாக அவர் சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி கோவை குணா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அவரின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் உட்பட ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தன் நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்த இவர் தற்போது உயிர் நீத்துள்ளது அனைவரின் மனதையும் கனக்க செய்துள்ளது. அவருடைய ஆன்மா சாந்தி பெற வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.