விஜயதாஸ, அலி சப்ரி தென்னாபிரிக்கா பயணம்!
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழு ஒன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.
இலங்கை அரசு நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு’வின் பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க், தென்னாபிரிக்காவுக்குச் சென்று அங்கு ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் அனுபவத்தைப் பெறுமாறு விசேட இராஜதந்திர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை அரசால், இனவெறி ஆட்சியின் போது கடத்தல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைகள் உட்பட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.