பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் அரசு வெட்கப்பட வேண்டும்! – ஜே.வி.பி. சாத்தல்.
“நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிட்டு, சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதைப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுகின்றார்கள். உண்மையில் ரணில் – மொட்டு அரசு வெட்கப்பட வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பைத் தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அவ்வாறாயின் நாடு தொடர்ந்து கடன் சுமைக்குள்தான் இருக்கும்.
உற்பத்தித் துறையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. தற்காலிக தீர்வு மாத்திரம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் சமூகக் கட்டமைப்பில் நிலையான மாற்றம் ஏதும் ஏற்படாது. கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.” – என்றார்.