திருப்பதியில் 1 கோடி பெறுமதியான செம்மரக்கட்டைகளை கடத்தியவர் கைது!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய இரண்டு பேர் அதை திருப்பதி வழியாக சென்னைக்கு காரில் கடத்தி சென்று கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த நாராயணவனம் போலீசார் திருப்பதி-சென்னை வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 25 செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் காரில் இருந்த ஒருவர் தப்பிஓடிவிட்டார். கார் ஓட்டுநர் ஆன திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருதுசாமி வேலுசாமி என்பவரை கைது செய்த போலீசார் காருடன் செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் இருந்து தப்பி ஓடிய நபர் சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தி சென்னையில் இருக்கும் முக்கிய கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.