காதல் திருமணம் செய்த மகளின் கணவனை கொலை செய்த பெண் வீட்டார்!
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த மகளின் கணவனை பெண் வீட்டார் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் வேலை செய்து வரும் இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புளுக்கான்கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சரண்யாவின் குடும்பத்தை விடப் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் சரண்யாவின் வீட்டார் இவர்களது காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஜெகன், சந்தியா இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தங்களின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றதால், சரண்யாவின் பெற்றோர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று ஜெகன் கிட்டம்பட்டியில் வேலை செய்துவிட்டு காவேரிப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஜெகனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த அரிவாளால் ஜெகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், கொலையாளிகளை நெருங்கும்போது, சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தப்பித்து ஓடி விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
சம்பவம் அறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறை கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல தகவல் கிடைத்து வந்த ஜெகனின் குடும்பத்தார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே, ஜெகனை கொலை செய்த சரண்யாவின் குடும்பத்தாரை கைது செய்யக்கோரி ஜெகனின் வீட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
கொல்லப்பட்ட ஜெகனின் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் மருமகனை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.