டெல்லி, ஸ்ரீநகர் உட்பட வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்..!
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பைசாபாத்திலிருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் வீட்டில் உள்ள சோபா, கட்டில் உள்ளிட்ட அதிர்ந்த நிலையில், பொருட்களும் கீழே விழுந்தன. பேன்களும் அசைந்தன.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அத்துடன், ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இரவு நேரத்தில் மக்கள் பலர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். காஷ்மீரில் ஸ்ரீநகரிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. கத்ரா பகுதியில் உள்ள வைஷ்ணவா தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள், அங்குள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறினர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் சீனாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டது.