ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…மீண்டும் வரும் ஏசி 3!
குறைந்த கட்டண ஏசி 3 அடுக்கு முறையை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக 3இ என்ற பெயரில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பயணிக்க ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த முறையில் பயணிப்போருக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. எனினும், இந்த முறை, கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த எகானமி கட்டண முறை மீண்டும் கொண்டு வரப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம், படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.