தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்! – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
ஒரு வருடத்துக்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இது வெறும் ஆரம்பம் தான். IMF ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சு நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்துவது மிகவும் கடினம். ஆனால், நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்
எனவே, இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும்.
கடன் வழங்குபவர்களுடன் பேச்சு நடத்தும் அதே நேரம், எமக்கு நான்கு வருட வேலைத்திட்டமும் உள்ளது. அதனால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நான் அதை சட்டப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த உடன்படிக்கைக்கு வாக்களிப்பது எங்களை மேலும் பலப்படுத்துகின்றது. இதற்கு மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்ட வேண்டும். எனவே, முதலில், இது ஒரு கடன் மறுசீரமைப்பு, ஆனால் கடன் மறுசீரமைப்பு மட்டும் அல்ல, நாம் அதை நமது பொருளாதார மறுசீரமைப்பாக மாற்ற வேண்டும்.
முதலில், எங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை உள்ளது. இந்த செயல்முறை மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலமாக இருப்பதோடு, நாம் அரச செலவினங்களை ஸ்தீரப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அரச செலவினங்களின் தன்மையையும், நமக்குக் கிடைக்கும் வருமானத்தையும் விவரிக்கின்றது. இது முதன்மை வரவு – செலவுத் திட்டத்தில் மேலதிகம் இருப்பதை உறுதி செய்வதோடு, வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றது.
நாம் அரச வரவு – செலவுத் திட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், இது எங்களுக்கு முதன்மை வரவு – செலவுத் திட்ட மேலதிகம் மற்றும் வருமான அதிகரிப்பை உறுதி செய்கிறது.
நாம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் மேலும் தாராளமயவாதத்தை (லிபரல்) தொடருவோம். தாராளமயம் என்பது நல்ல வார்த்தையல்ல என்றும், வெளிநாட்டு முதலீட்டுக்காக அதைத் திறந்து விடுகின்றோம் என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
நாம் பல்வேறு முதலீட்டுத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்த்து வருகின்றோம். அதன் மூலம் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும்” – என்றார்.
10 வருடங்களில் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக மாறும் திட்டத்துக்கு இந்தக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, முதல் பணியாக இந்த உடன்படிக்கையை அங்கீகரித்து அதன் பின்னர் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும், கடனைத் திருப்பிச் செலுத்தும் முறையை அதன்போதே அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
“இரண்டாவதாக, விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் நவீனமயமாக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இலங்கையை பிராந்திய விநியோக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுலாத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை நிச்சயமாக மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.
இன்னும் 25 வருடங்களில் அதாவது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம் ஆகும். ஒரே இடத்தில் தேக்க நிலையில் உள்ள பொருளாதாரத்துடன் எம்மால் முன்னேற முடியாது. நம் நாட்டில் நடந்த அனைத்து பிரச்சினைகளும் இந்த பிரச்சினையுடன் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1971இல் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினையைப் போன்று, 1983இல் மொழி மட்டுமன்றி, தமிழ் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பின்மையால் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுதான் 1989 இலும் நடந்தது. எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை இரத்தம் சிந்துவதற்கு வழிவகுத்தது. இப்போது புதிதாக தொடங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது ஒரு வரலாற்று செயல்முறை. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்த சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறை பற்றி அறிந்துகொள்ள எந்த நேரத்திலும் அதிகாரிகளுடன் பேசுவதற்குப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால், இந்த உடன்படிக்கையை நாம் முன்னெடுப்பதா? இல்லையா? என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இல்லை என்றால் வருங்கால சந்ததி நம்மை சபிக்கும்.
எனவே, அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கும் வகையில் நமது பொருளாதாரத்தில் இந்த நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் ஆதரவை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த ஒப்பந்தத்தை நாங்கள் முதல் பணியாக அங்கீகரித்து, கடனை மறுசீரமைக்கச் செல்கின்றோம். அதன் பிறகே கடனை எப்படி செலுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எங்கள் நிகழ்ச்சிகள் முடிவடையவில்லை. ஏன் முடிக்கவில்லை? அது அரசியலாக மாறியது. இல்லையெனில், அது பொதுமக்களின் கருத்துக்கு உட்பட்டது. மக்கள் கருத்தை உருவாக்கியது ஊடகங்கள்தான். இம்முறை இத்திட்டம் வெற்றியடைய ஊடகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
மேலும், எம்.சி.சி மானியத்தை இலங்கை பெறப்போகும் போது, சில தரப்பினர் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம்சாட்டினர். IMF வந்ததும் மேற்குலகிடம் சரணடைவோம் என்று சொன்னார்கள். அதனால் இப்படியே தொடர்வது கடினம். எனவேதான் சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய இணையுமாறு ஊடகங்களைக் கோருகின்றோம்.
இந்தச் செயல்முறை மிகவும் கடினம். நாம் அனைவரும் அதை உணர்கிறோம். இது நான்கு வருட செயல்முறை. இது 2026இல் முடிவடையும். என்னுடன் வெகு தூரம் பயணித்தவர்கள், எனது கொள்கைகள் சரி என்று சொன்னவர்கள் இப்போது எனக்கு எதிராக பேசுகின்றார்கள்.
அதனால் எதிர்த்தவர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது கடினமான இடத்தில் இருக்கின்றோம். பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது. பழைய விளையாட்டுகளைத் தொடர்ந்தால் மீண்டும் விழ நேரிடம். எனவே, கடந்த காலத்தை மறந்து முன்நோக்கிச் செல்ல வேண்டும்.
நாங்கள் அனைவரும் தவறு செய்தோம். இதை இப்போது ஏற்றுக்கொண்டு எங்களை ஆதரிக்கவும். இந்தப் பணத்தில் சம்பளம் வழங்குகின்றோம். இது திருட்டல்ல. திருட்டு என்ற கதைகளினால், இவைகளை இழந்தோம். இதுபோன்ற கதைகளைப் பரப்ப வேண்டாம். இப்படி கூறுபவர்கள் இதைவிட திருடுகின்றனர். இங்கிருப்பவர்களைவிட எனது சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் திருடர்களைப் பாதுகாக்க வந்ததாகக் குற்றம் சாட்டினார்கள். ஆனால், IMF உடன் ஆலோசித்து தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைக் கொண்டு வருகின்றோம். எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும் இப்படி எதனையும் செய்யவில்லை. நீதி அமைச்சர் இது குறித்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார்.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். இதை யாரும் எதிர்க்க முடியாது. சில புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய சட்டங்கள் சிலவற்றையும் கொண்டுவரவுள்ளோம். பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை. ஊடகங்கள் என்னையே அதிகமாக விமர்சிக்கின்றன. எனக்கே ஊடகங்கள் இல்லாமல் போனது. ஊடகங்கள் மீதிருந்த குற்றவியல் சட்டத்தை நான் தான் நீக்கினேன். தகவல் அறியும் உரிமையையும் நான்தான் வழங்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்கள் மூன்று தடவைகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தேன். இப்படிக்கு இருக்கும் போது ஊடகங்களை ஒடுக்கியதாக எப்படி கூற முடியும்?
தேசிய பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கின்றார்கள். ஆனால், நான் அந்த விடயங்களை செய்து கொண்டிருக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து ஏனைய பிரச்சினைகளைக் களைய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என்று ஊடகங்களில் யாரும் கூறவில்லை.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் செயற்படுகின்றோம் என முன்னரே கூறியிருந்தேன். எந்த ஊடகமும் அதை எதிர்க்கவில்லை. அதனை நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் போர்வையில் இனவாதத்தை உருவாக்காதீர்கள். ஒரு ஊடக நிறுவனம் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. ஒரே விடயத்தை நான்கு நாட்கள் ஒளிபரப்பினார்கள். இதனைப் பார்த்துவிட்டு தமிழ் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் ஒளிபரப்பினால் பரவாயில்லை. அதற்கு இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும். ஆர்ப்பாட்டங்களைக் காட்ட வேண்டாம் என்றும் எனது நலவுகளை மாத்திரம் ஒளிபரப்புமாறும் நான் கேட்கவில்லை” – என்றும் ஜனாதிபதி கூறினார்.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மட்டுமின்றி, இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களையும் மறுசீரமைக்க அரசு முடிவு செய்துள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஜனாதிபதி கீழ்கண்டவாறு பதிலளித்தார்.
“அரசு ஏன் வியாபாரத்தில் ஈடுபடவேண்டும்? அது அரசின் வேலையல்ல. டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்தில் அவ்வாறான வேலைகள் இல்லை. ஆனால் நாட்டில் பணம் இருந்தது. அப்போது, இங்கிலாந்துக்கு கடன் கொடுக்கவும், கல்ஓயா திட்டத்தை முன்னெடுக்கவும் பணம் இருந்தது.
இப்போது மொரகஹகந்த வேலைத்திட்டத்திற்கு நாம் சீனாவிடம் பணம் கேட்கின்றோம். அரச நிறுவனங்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எந்த நாட்டில் சட்டம் உள்ளது? ஒரு நாடாக நாம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அரசு வியாபாரங்களை செய்ய வேண்டும் என்று நாம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றோம்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவுமே அரசு இருக்கின்றது. இன்று நல்ல கல்வி முறை இருக்கின்றதா? கடந்த ஆண்டு கல்வியை விட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதிக பணம் கொடுத்துள்ளோம். கல்வியை விட மின்சார சபைக்கு அதிக பணம் வழங்கினோம்.
டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் இதுவொன்றும் இருக்கவில்லை. தனியார்துறையினர் வியாபாரம் செய்யும் போது அரசுக்கு வரி கிடைக்கும் இங்கிலாந்தில் டெலிகாம் யாருக்கு சொந்தம்? தனியார் துறைக்கு. பிரான்சிலும் அமெரிக்காவிலும் இதே நிலைதான். நாமும் அவ்வாறே அபிவிருத்தி செய்ய வேண்டும். அல்லது வடகொரியா போல் விழ வேண்டும். நீங்கள் விரும்பும் ஒன்றைச் சொல்லுங்கள்.” – என்றார்.
இங்கு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன,
“2002 ஆம் ஆண்டு, தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்தபோது, அரச நிதி முகாமைத்துவ ஒழுக்கத்தை தயாரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி ஒழுங்குமுறை முகாமைத்துவச் சட்டத்தை முன்வைத்தார். இந்தச் சட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது. 2006ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆகக் குறைக்கவும், அதன்பின்னர் ஆட்சிக்கு வரும் அரசு அதனை 5% மாக பராமரிக்கவும் இந்த சட்டமூலத்தின் ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
2013 ஆம் ஆண்டில், அரசின் நிலுவையில் உள்ள கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65% ஆகக் குறைத்து, அதிலிருந்து அதனை அதே நிலையில் பேணுவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூன்றாவது விடயமாக, அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீதம் மட்டுமே கடன்பெற முடியும் என்ற ஏற்பாடும் இருந்தது.
இந்த மூன்று விடயங்களை உள்ளடக்கி இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஆனால், துரதிஷ்டவசமாக 2004ஆம் ஆண்டு அந்த ஆட்சி சரியில்லை என்றும், அதற்குப் பதிலாக வேறு ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் முடிவு செய்தனர். அப்போது நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசகர்கள் மீண்டும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி அதனை மறுசீரமைத்தனர். அதனால், அந்த பொருளாதார இலக்குகளை எங்களால் எட்ட முடியவில்லை
அரசின் முடிவுகள் பிரபலமாக இருக்காது. கடினமான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நாடும் எதிர்காலமும் இருக்காது என ஜனாதிபதி எப்போதும் அமைச்சரவையில் கூறிவருகின்றார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் எதையும் மறைக்காமல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இதைத் தவிர வேறு வழிகள் இருந்தால் யாராவது நாடாளுமன்றத்துக்கு முன்வையுங்கள்.
மேலும் அரசுக்கு நிறைய பணம் மிச்சமாகும். அப்படியானால், பிரான்சில் உள்ள லாசாட் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கடனில் இருந்து மீள வேறு வழி சொல்லக்கூடியவர்கள் இருந்தால் அதை செயல்படுத்த முடியும். இது நாம் நினைப்பதை விட சிக்கலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் மக்கள் மயப்படுத்த உதவுங்கள்.” – என்றார்.
இங்கு உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,
“கடனை மறுசீரமைக்கவில்லை என்றால், வருடத்துக்கு 6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமையாக இருந்தது. இதனைச் செலுத்த கடினமாக இருப்பதால், கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கடனை மறுசீரமைப்பதற்கு இந்த செயல்முறை பின்பற்றப்படுகின்றது. தற்போதிருக்கும் முறையில் அதனை மீளச் செலுத்த முடியாது என்பதால் எமக்கு கடன் வழங்கிய வணிக நிறுவனங்களிடமும், தனியார் நிறுவனங்களிடமும், அதற்கான நிவாரணம் வழங்குமாறும் அந்தந்த அரசுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தச் செயற்பாட்டின் முதல் படி கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் நிதி உத்தரவாரம். நமது கடனை நிலையானதாக மாற்றுவதற்கான இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தில் உள்ளன. அந்த நிலையான நிலையை அடைய, ஒவ்வொரு நாடும் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன.
அடுத்த கட்டமாக அந்த உத்தரவாதத்தின் பிரகாரம் பேச்சு நடத்தி வருடத்திற்கு 6 பில்லியன் என்ற வீதத்தில் நாம் செலுத்த வேண்டிய கடனை இந்த நேரத்தில் செலுத்த முடியாது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.
மீண்டும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம் என்ற நிலை இல்லை. கடன் வாங்கும்போது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், யாரும் மீண்டும் கடன் கொடுக்க மாட்டார்கள். எங்களால் கடனை அடைக்க முடியாததால், மீளச் செலுத்தாமல் இருப்பதற்குப் பதிலாக நிவாரண அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கோருகின்றோம்.
உதாரணமாக, தற்போது 10 ஆண்டுகளில் 50 பில்லியன் செலுத்த வேண்டும் என்றால், நாங்கள் 20 – 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுக்கலாம்.
ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%க்கு மேல் கடனை மீளச் செலுத்த முடியாது. அதன்படி, அந்த எண்ணிக்கையை குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலுவைத் தொகையை நீண்ட கால அடிப்படையில் வழங்குவதற்கான பேச்சுகளையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்” – என்றார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி மகிந்த சிறிவர்தன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுச பெல்பிட்ட, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தினித் சித்தக கருணாரத்ன உள்ளிட்டோருடன் ஊடக நிறுவனப் பிரதானிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.