நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவு.
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அதுகோரல அவரது பெயரை முன்மொழிந்ததுடன், கௌரவ (சட்டத்தரணி) அனுர பிரியதர்ஷன யப்பா அதனை வழிமொழிந்தார்.
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் 2023.03.23 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது குழுவுக்கான தலைவர் தெரிவு இடம்பெற்றது.
குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் நீதி மற்றும் நியாயமான தன்மை தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று, அதற்கமைய அந்நிறுவனங்களை ஊக்குவித்தல் அல்லது வழிகாட்டல்களை வழங்க புதிய துறைசார் மேற்பவைக் குழுவின் ஊடாக எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (சட்டத்தரணி) றவுப் ஹகீம் மற்றும் கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.