எங்கள் நிபந்தனைகளின்படி IMF கடன் கொடு..இல்லையா வேண்டாம்.- JVPயின் சமன்த வித்யாரத்ன (Video)
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) கடன் வாங்கினால் அந்த நிதியத்தினால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு கடன் வாங்க மாட்டோம். எங்கள் நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டால் கடனை தா என்றே கேட்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், தமது அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளின் கீழ் கடன்களை வழங்க முடிந்தால் வழங்குங்கள் என நிதி நிதியத்திற்கு அறிவிப்போம் என்றார் அவர் .
சர்வதேச நாணய நிதியம் , நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளை விதித்தால் அதற்கு தாம் உடன்படப் போவதில்லை என தெரிவித்த அவர், நாம் முன்வைக்கும் நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்க முடியவில்லை என்றால் , அந்தக் கடன் தேவையே இல்லை எனவும் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் கூறுவது போன்று தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை மண்டியிட வைக்க தாம் தயாரில்லை என , தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களின் நண்பர்களான கோடீஸ்வர வர்த்தகர்கள் , தமது டொலர்களை வெளிநாடுகளில் மறைத்து வைப்பதே இந்த நாட்டின் டொலர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் 60 பிலியன் டொலர் பணம் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என சர்வதேச தகவல் ஒன்று தெரிவிக்கிறது. எமக்கு கிடைக்கும் கடன் 2.6 பிலியன்தான். கடனை விட அதிக பணம் அரசியல்வாதிகளை சுற்றி இருக்கும் கோடீஸ்வர வர்த்தகர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். அதை வைத்து வெளிநாடுகளில் வியாபாரங்களை செய்கிறார்கள். அதில் 10 சதவீதத்தை கொண்டுவர முடிந்தாலே 6 பிலியன் டொலர்களை கொண்டு வர முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த செல்வத்தில் ஓரளவையாவது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் , நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.