சர்வதேச ரீதியாக பெண்களுக்கான பொதுவான சவால்கள் என்ன?
இது பெண்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆண்டாகும். பல நாடுகளில் பெண் பிரதமர்களும், பெண் ஜனாதிபதிகளும், வேறு துறைகள் சார்ந்த பணிகளிலும் முன்னெப்போதையும் விட அதிகமாக, பொறுப்பு வாய்ந்த பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் மேற்கத்தைய நாடுகள் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பெண்கள் பாலின சமத்துவம் இன்றி பல சவால்களை எதிர் கொள்வதைக் காணக்கூடியதாய் இருக்கிறது. இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பல பெண் ஆளுமைகளை,சர்வதேச ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், சட்டமியற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட பலரை இப்படியான சவால்களைக் கோடிட்டுக் காட்டும் படி கேட்டதில் பின்வரும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
தலைமைப் பொறுப்புகளில் அல்லது அதிகார பதவிகளில் பெண்களின் பற்றாக்குறை
ஏமி க்ளோபுச்சர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன் நிக்கப் போகும் ஒரு பெண் ஆளுமை. இவருடைய கருத்துக்கள் இப்படியுள்ளன:
அனைவர்க்கும் பொதுவான ஒரு தளத்தில் கொள்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கும் போராட்டங்களில் ஒன்று அதிகார பதிவுகளில் பெண்கள் தொடர்ந்து பதவி வகிக்காதது! அன்றாட வேலைத் தளங்களில் இருந்து நீதிமன்றம் உள்ளிட்ட, அரசியல் தலைமைகள் வரை உயர் பதவிகளில் பெண்களின் பற்றாக்குறை என்பது ஊதியம் முதல் மனிதாபிமான உதவி வரை அனைத்து விதத்திலும் பாகுபாடு காண்பது போன்ற விடயங்களில் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது. இங்கு தனியே பெண்களின் முன்னேற்றம் மாத்திரமன்றி அனைத்து மக்களின் முன்னேற்றத்தையும் பின் தள்ளிவிடுகிறது. பெண்களின் பிரதிநித்துவம் எல்லா துறைகளிலும் வரும் போது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முன்னேற்ற முடியும்.
ஆணாதிக்கம்
கெய்ஷா என் பிளேன் பீட்டர்ஸ்பேக் பல்கலைக்கழகத்தில் வரலாற்றைக் கற்பிக்கிறார், இவருடைய கருத்துக்கள் இவ்வாறு இருக்கின்றன.
இன்று மேற்கத்தைய நாடுகள் உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளிலும் பெண்கள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று ஆண் ஆதிக்கமாகும். இது குறிப்பாக அரசியல் துறையில் துல்லியமாகத் தெரிந்தாலும் ஏனைய துறைகளில் உள்ள பணிகளும் இதற்கு விதி விலக்கல்ல. ஒரு பெண்ணின் கல்வி, அவளது அனுபவங்களைக் கருத்தில் கொள்ளாது, ஆணாதிக்க இயல்பானது பெண்கள் ஆண்களை விடக் குறைந்த திறன் கொண்டவர்கள் என்ற கருத்தை வளர்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வலிமையான, ஆளுமை கொண்ட பெண்ணானவள் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த தேவைகளையும் முன்னெடுத்துச் செல்லாமல் ஒரு பிரச்சனையை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் என்று மக்களை நம்ப வைப்பதே!
இதன் அடுத்த பக்க சவால் என்னவெனில் இப்படியான தருணங்களில் சில அல்லது அதிகமான ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை மிக அழகாக, பக்கச் சார்புடன் எடுத்துச் செல்வதுதான். உதாரணமாக பெண்களுக்கான ஆடை அலங்காரங்களைப் பற்றி பேசுவதன் மூலம் பொது மக்களின் கவனத்தைச் சிதறடித்து, இதன் மூலம் அப்பெண்களின் பொதுக்கொள்கை சார்ந்த கருத்துக்களின் பெறுமதியைக் குறைத்துக் காட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இவர் மேலும் கல்வி சமத்துவமின்மை பற்றிக் கூறும் போது இவ்வாறு தன விசனத்தைத் தெரிவிக்கிறார்.
கல்வி சமத்துவமின்மை
உலகளாவிய கண்ணோட்டத்தில், பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று கல்வி சமத்துவமின்மை. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் பல நவீன பெண்ணிய இயக்கங்களின் கல்வித் திட்டங்கள் பல முன்னேற்றங்களை சமூகம் சார்ந்து கொண்டு வந்திருக்கின்ற போதிலும் ஆண்களுக்கு வழங்கப்பட்ட அதே கல்வி வாய்ப்புகளுக்கு பெண்கள் குறைவாகவே தகுதியடையவர்கள் என்று ஒரு கருத்து சமூகத்தில் நிலவுகிறது. வறுமை, புவியியல் மற்றும் பிற காரணிகள் கல்வியில் பெரும் ஏற்றத்தாழ்வை தருகின்றன என்பதை மறுக்க முடியாது என்கின்ற போதிலும் ஆண் அதிகமானது இந்த வாய்ப்பை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.
ஆண்களின் சக்தியை உலகெங்கும் பாவிக்க வேண்டும், பெண்கள் அடிபணிந்த பதிவிகளையே நாட வேண்டும் என்ற தவறான கருத்தை இது வலியுறுத்துகிறது. இப்படியான கண்ணோட்டமானது கல்வி சமத்துவமின்மையையும் உலகளாவிய ரீதியில் பாலினச் சமத்துவமின்மையையும் தோற்றுவிக்கிறது.
சம வாய்ப்புக்கான பெண்களின் அணுகு முறைகள் குறைவாக இருப்பது
ஏர்தரின் கசின் உலகளாவிய விவகாரங்களுக்கான சிகாகோ பிரதிநிதியாக உள்ளவர், உலக உணவுத் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராக இருந்தவர் ,இவரின் அனுபவத்தில் இவர் மிகச் சிக்கலான சூழ் நிலையில் உள்ள பெண்களை அணுகிய போது அவர்கள் தமக்காக எதுவுமே கேட்காமல் தமது பெண் குழந்தைகளின் கல்விக்கான கோரிக்கைகைகளை மட்டுமே முன் வைத்ததாகக் கூறுகிறார். இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது மிகவும் கவலைக்குரியது, ஏனெனில் அவர்கள் தமக்கான வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளாமல் இன்னும் தமக்குக் கிடைக்காத கல்வி உரிமையை தம் குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளட்டும் என்று நினைப்பதுதான். தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை தமது பெண் குழந்தைகள் வென்றெடுப்பதற்கு அவர்கள் கல்வி உதவும் என நம்புகிறார்கள். இவை போன்ற கருத்துக்கள் உலகெங்கிலும் உள்ள பெண்கள் இன்னும் சம வாய்ப்புக்கான அணுகலை கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
பாலினத்தால் வாய்ப்புகள் வரையறுக்கப்படாத ஒரு நிலையை இன்னும் நாம் உலக அளவில் கொண்டிருக்கவில்லை என்பது கண்கூடு. உலகெங்கிலும் பெண்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தினாலும் அரசுகள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் சார்ந்த சேவைகளில் பாலின சமத்துவம், சரியான சமூகக் கட்டமைப்பில் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதை நான் உலகமெங்கும் வாழும் பெண்களின் குரலாய் ஒலிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
வீட்டு நிர்வாகம் சார்ந்த, பராமரிப்பு பணிகளில் ஆண்களின் பங்கு குறைவாக இருப்பது
ஆன் மேரி ஸ்லோட்டர் என்னும் பெண் ‘புதிய அமெரிக்கா’வின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், இவர் பெண்களுக்கான சவால்களில் முதன்மையானதாக வீட்டு பராமரிப்பானது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் தலையில் விழுவதால் அவள் வீட்டுக்கு உள்ளும் வெளியிலுமாக இரண்டும் முழு .நிர்வாகத்தில் ஈடுபடுத்துவதே சாலச் சிறந்தது எனவும் குறிப்பிடுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பெண்களின் பாரம்பரிய பொறுப்புகள் என வரையறுக்கப்பட்ட பெற்றோர் கவனிப்பு, குழந்தைகள் கவனிப்பு, கணவர் கவனிப்பு போன்ற பராமரிப்பு வேலைகளை மதித்து அதற்கான கௌரவத்தை வழங்குவது மட்டுமல்ல அதற்குண்டான நேரத்திற்கான செலவுகளையும் கருத்தில் கொண்டு அவற்றை ஆண்களின் பாரம்பரிய வேலைகள் என்பதாக சமப்படுத்தல் வேண்டும்.
இன்னும் இது போன்ற பல்வேறு சவால்களைப் பெண்கள் எதிர் நோக்கினாலும் சர்வதேச ரீதியில் பெண்கள் ஒன்றுபட்டு தம் குரல்களை உரக்கச் சொல்லி தமக்கான உரிமைகளை வென்றெடுப்பது அவசியமாகின்றது. இது குறித்து மேற்கொண்டு ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்ற தளங்கள் அவசியமாகின்றன,