தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் XBB வகை கொரோனா தொற்று!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 மாதங்களுக்கு மீண்டும் ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வெள்ளியன்று 88ஆக பதிவானது.
தமிழ்நாட்டில் உறுதி செய்யப்படும் கொரோனா மாதிரிகளில் 83.6 விழுக்காடு XBB வகையை சேர்ந்தது என மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒமைக்ரான் கொரோனாவின் உள்வகையாகும். பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் சேகரித்த 144 மாதிரிகளை, பொது சுகாதாரத்துறையின் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ததில் இந்த தகவல் கிடைத்துள்ளது.
XBB வகை கொரோனாவுக்கு அடுத்தபடியாக, BA.2 வகை 13.7 சதவிகிதமும், BA.5 வகை 2.7 சதவிகிதமும் கண்டறியப்பட்டுள்ளது. XBB வகை கொரோனா தொற்றை உன்னிப்பாக கவனத்து வருவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
XBB வகை கொரோனா தமிழகத்தில் கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. சென்ற ஆண்டு செப்டம்பரில் இந்த வகை தொற்று பாதிப்பு 3.6 விழுக்காடாகவும், அக்டோபரில் 52 ஆகவும், நவம்பரில் 78ஆகவும் இருந்தது. ஜனவரியில் 50 விழுக்காடாக இருந்த XBB வகை கொரோனா பாதிப்பு மீண்டும் 83 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் , கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.