ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்! – அரசின் முக்கியஸ்தர்களுக்கு ரணில் பணிப்பு.
2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என அரச உயர்மட்டம் தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று அந்தத் தகவல் கூறுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தைப் பெற்று ஓரளவாவது பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் அதில் தான் வென்றுவிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே நம்பியிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பணம் உறுதியாகியுள்ளது. முதலாம் தவணைப் பணமும் கிடைத்துள்ளது. பொருட்களின் விலைகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் 2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் தான் வென்று காட்ட ரணில் திட்டம் வகுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதே ரணிலின் தீர்மானமாக உள்ளது என்றும் அரச உயர்மட்டம் மேலும் தெரிவிக்கின்றது.