வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவையில் தமிழ்க் கூட்டமைப்பு! – நான் ஜனாதிபதியாகி இருந்தால் நியமித்திருப்பேன்.
“நான் ஜனாதிபதியாகி இருந்தால் என்னோடு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிந்திருக்கும். வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இருப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைவதற்கு ஒரேயொரு காரணம் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அரசொன்றை அமைப்பதற்கு எடுத்த முடிவுதான். நான் ஜனாதிபதியாக வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதான் பிரதமர் என்று அன்று பகிரங்கமாகக் கூறியிருந்தேன்.
நான் ஜனாதிபதியாகி இருந்தால் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களும் அமைச்சரவையில் இருப்பதற்கு வாய்ப்பிருந்தது.
அநேகமாக ஒருவருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியிருப்பேன். அதேவேளை, தேர்தல்களையும் ஒழுங்கு முறையில் நடத்தியிருப்பேன்.
என்னோடு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிந்திருக்கும். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை எந்தளவு மோசமானது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகின்றது.
மூன்று அரசமைப்புகளை நாம் கண்டுள்ளோம். அதில் இறுதியாக 1978இல் உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தோடு நாம் நிற்கின்றோம்.
இந்த அரசமைப்புகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆட்சியில் இருக்கும் கட்சியை – அதன் தலைவரைத் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்குமாகும். மக்கள் நலன்களுக்காக – நாட்டின் நலன்களுக்காக இவை உருவாக்கப்படவில்லை.
தேர்தல் முறைமையும் அந்த நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தேர்தல் முறைமையை ஜே.ஆர் கொண்டு வந்தது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில். அவரே அப்போது இதைக் கூறியுள்ளார்.
இப்போதுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரம் வரை அதிகரித்தவர் ரணில் விக்கிரமசிங்க. அவரே இப்போது சொல்கின்றார் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று. அவரே அந்தப் பிழையைச் செய்துவிட்டு இப்போது அவரே அதைத் திருத்த வேண்டும் என்கின்றார். இந்த நிலைமைகள் மாற வேண்டும். நான் ஜனாதிபதியாகி இருந்தால் இந்த நிலைமைகளை மாற்றியிருப்பேன்.” – என்றார்.