தமிழ்நாடு-குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிணைப்பு இருந்துள்ளது – பிரதமர் நரேந்திர மோடி
சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையே கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்வை தொடங்கி நடத்தி வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்நிகழ்வை சென்னையில் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 26 வரை குஜராத் மாநிலம், சௌராஷ்டிரா பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அடிப்படையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது.
சேலத்தில் நேற்று நடைபெற்ற சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மத்திய ஜவுளித்துறை மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனாபென் ஜர்தோஷ், குஜராத் கூட்டுறவு துறை அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக சேலத்தில் வசித்து வரும் சவுராஷ்டிரா மக்கள் தாண்டியா நடனமாடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்ற நிலையில், அவர் தனது ட்விட்டர் செய்தியில், “தமிழ்நாடு-குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிணைப்பு இருந்துள்ளது. இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வு அதை வலுப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.