மதுபான போத்தல் மோசடி: சுங்க அதிகாரிகள் மூவருக்கு மறியல்
வெளிநாட்டிலிந்து மதுபானம் இறக்குமதி செய்து அதை மீள் ஏற்றுமதி செய்யும் சுங்க தீர்வையற்ற திட்டத்தின் கீழ், மோசடி செய்த சுங்க பரிசோதகர்கள் மூவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
ஸ்ரீ லங்கா சுங்கத்திணைக்களத்தின் பிரதான பரிசோதகரான பாணந்துறை, கொரகாபொல குமாரதுங்க முனிதாஸ மாவத்தையைச் சேர்ந்த ரணவக்க ஆரச்சிகே காமினி பெரேரா, சுங்க திணைக்களத்தின் பரிசோதகர்களான கந்தான, நாகொட பியனம மாவத்தையைச் சேர்ந்த மாபலகம ஆரச்சிகே நிஷாந்த லக்சிரி, களுத்துறை, நாகொட, மூன்றாம் ஒழுங்கை கே.பி. கசுன் கயத்ரி பதிரகே ஆகிய மூவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இவ்வாறு மோசடிகளைச் செய்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் குற்றத்தடுப்பு பிவிரினர் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் தெரியப்படுத்தியுள்ளனர்.
சீதுவையிலுள்ள வெளிநாட்டு மதுபான வகைகளை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனமொன்று, தீர்வையற்ற களஞ்சியங்களிலிருந்து மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட குறித்த வெளிநாட்டு மதுபானங்களான, உயர் ரக விஸ்கி, பிராண்டி, வொட்கா போன்ற 924 மதுபான போத்தல்களுக்குப் பதிலாக அதற்கு சம அளவிலான தண்ணீர்ப் போத்தல்களை நிரப்பி இம்மோசடியை மேற்கொண்டு வந்துள்ளமை, குற்றப் புலனாய்வு பிரிவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த மீள் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெற்றிருந்த தனியார் நிறுவனம், அதை சுங்கத் திணைக்களத்தின் பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் சீதுவையிலுள்ள சுங்கத் தீர்வையற்ற களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதன்பின் அவற்றை தயார்செய்து மீள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இத்திட்டம் இவ்வாறு இருக்க துறைமுகத்தின் சுங்கத்திலிருந்து எடுத்து வந்த குறித்த மதுபானங்கள், குறித்த நிறுவனம் அமைந்துள்ள சீதுவைக்கு செல்லாது, பேலியகொடை, நுகே வீதியில் உளள இரகசிய களஞ்சியசாலை ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மதுபான போத்தல்களுக்கு பதிலாக, அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் தண்ணீர் போத்தல்கள் மாற்றப்பட்டு சீதுவைக்கு எடுத்துச் செல்லப்படும் விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யும் இம்மதுபானங்கள் அடங்கிய லொறி வண்டிகள் சீலிடப்பட்டு துறைமுகத்திலிருந்து சீதுவை களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு மோசடி செய்யும் லொறிகள் துறைமுகத்தில் சீலிடாமல் வெளியில் கொண்டுவரப்பட்டு நுகே வீதியில் இரகசிய களஞ்சியசாலைக்கு எடுத்துச் சென்றதன் பின் போத்தல்கள் மாற்றப்பட்டு பின் சீலிடப்பட்டு சீதுவைக்கு எடுத்துச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க களஞ்சியத்திலிருந்து இவ்வாறு செல்லும் குறித்த லொறியின் பின்னால் மற்றுமொரு வாகனத்தில் செல்லும், சுங்க அதிகாரிகள் குறித்த இரகசிய இடத்திற்கு சென்று இம்மோசடியை மேற்கொண்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
சுங்க திணைக்கள பிரதம பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் இரகசியப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.