இங்கிலாந்து வாழ் இலங்கை அகதி தமிழகத்தில் கைது

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கையர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

39 வயதான ஜெகன் பெர்னாண்டோ மனோகரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனோகரன் இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று லண்டனில் தங்கியிருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

(இலங்கை நாட்டில் உயிராபத்து என அகதி அந்தஸ்த்து கோருவோர் , இலங்கை நாட்டை தவிர எந்தவொரு நாட்டுக்கும் செல்ல அனுமதியுண்டு என்பது ஒரு குறுந் தகவல்)

மனோகரன் நேரடியாக இலங்கைக்கு செல்ல முடியாததால், இந்தியாவுக்கு வந்த அவர், படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

முன்னைய செய்தி

இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர், இந்தியா — இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதி வழியாக, அந்நாட்டுக்கு தப்பி செல்கிறார் என, தகவல் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்து, மூன்று தீவுகள் உள்ளன. மூன்றாவது தீவை கடந்த பின், சர்வதேச கடல் எல்லை அமைந்துள்ளது. அந்த மூன்றாவது தீவு வழியாக, இலங்கைக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்ற அகதி ஒருவரை, கடலோர காவல் படை அதிகாரிகள் குழு பிடித்தது.

கடல் வழி பயணம் மேற்கொள்ள, அவரிடம் உரிய அனுமதி இல்லை. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.