சாவர்கர் எங்களுக்கு கடவுளை போன்றவர்….ராகுல் காந்தியை எச்சரித்த உத்தவ் தாக்ரே
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா(UBT) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்ரே கூட்டணி கட்சியின் தலைவரான ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சாவர்கர் குறித்து ராகுல் காந்தி கூறி வரும் கருத்துக்கு உத்தவ் தாக்ரே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள மகாவிகாஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்ரே சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன. சமீபத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி, “நான் ஒன்றும் சாவர்கர் அல்ல, மன்னிப்பு கேட்க மாட்டேன். பாஜகவை தொடர்ந்து எதிர்த்து போராடுவேன்” என்றார். இவ்வாறு சாவர்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதை குறிபிட்டு ராகுல் காந்தி தனது விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இதற்கு கூட்டணி கட்சி தலைவரான உத்தவ் தாக்ரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தவ் தாக்ரே, “ராகுல் காந்தியிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் தான் உங்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால், நேரடியாக ஒன்றை உங்களிடம் இப்போது சொல்கிறேன்.
சாவர்கர் எங்களுக்கு கடவுளை போன்றவர். அவரை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் ஜனநாயகத்தை காக்கத்தான் ஒன்றிணைந்துள்ளோம். அதேவேளை, கூட்டணியில் பிளவு ஏற்படும் வகையில் கருத்துக்களை நீங்கள் பேசக்கூடாது. உங்களை துண்டிவிடும் வகையில் பாஜக செயல்பட்டாலும் அதற்கு நீங்கள் இரையாகக் கூடாது. சுதந்திர போராட்டத்தில் சாவர்கர் அடைந்த துன்பத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.