திருப்பத்தூரில் வீட்டில் சடலமாக கிடந்த தாய் மகன்….போலீஸ் விசாரணை!

திருப்பத்தூர் அருகே தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள துவார் கிராமத்தில் பூமலை கண்மாய் பகுதியை சேர்ந்தவர் அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் மகன் சின்ன கருப்பனுடன் (26) வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்ன கருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை விவசாய கூலிப்பணிக்கு அழைப்பதற்காக சிகப்பி என்பவர் அடக்கி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் தாய் அடக்கியும், கட்டிலில் மகனும் உயிரிழந்து சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.