அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு…!
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து, இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து கடந்த 22-ம் தேதி நீதிபதி விசாரித்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் 7 மணிநேரங்களுக்கு வாதங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு , சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை என தீர்ப்பளித்தார்.
அதிமுகவின் அமைப்பு தேர்தல் செல்லும் என்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்த விஸ்வநாதன் வெளியிட்டனர். இதனையடுத்து அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.