ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடைகளுக்கு வார விடுமுறை அளிக்கும் விநோத பழக்கம்
மனிதன் நாகரீக சமூகமாக மாறத் தொடங்கியதிலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் கால்நடைகள் என்பது மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது. மனித சமூகத்தின் தொடக்கத்திலிருந்தே கால்நடையைப் பயன்படுத்தியே மனிதனின் வாழ்க்கை அமைந்துவருகிறது. தற்போது, நவீன நாகரீக வாழ்க்கையில் கால்நடையுடன் இணைந்த வாழ்க்கையிலிருந்து மனிதன் வெகுதூரம் வந்துவிட்ட பொழுதும், கிராமப் புறங்களில் கால்நடைகளுடன் இணைந்து வாழும் சூழலே உள்ளது.
உலகம் முழுவதுமே கால்நடைகளில் மாடுகளுக்கான முக்கியத்துவம் மிக அதிகம். இயந்திரமாதலுக்கு முன்னர் விவசாயம், இடப் பெயர்ச்சி என மனிதனின் பல பணிகளுக்கு மாடுகளின் பங்களிப்பு இருந்தது வந்தது. தற்போது, பாலுக்காகவே மாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் சூழல் உள்ளது. பிற தேவைகள் இயந்திரங்களில் நிரப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜார்கண்ட்டில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள கிராமங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வார விடுமுறை அளிக்கும் வழக்கம் இருந்துவருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தெரிவிக்கும் கிராமத்தினர், ‘கால்நடைகளுக்கு விடுமுறை வழங்கும் வழக்கம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பழங்குடி மக்கள் வியாழக்கிழமை கால்நடைகளிடம் வேலை வாங்குவது கிடையாது. பிற மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நடைகளுக்கு விடுமுறை வழங்குவார்கள். எத்தனை அவசரமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை வேலை வாங்குவது கிடையாது. விடுமுறை அளிக்காமல் வேலை வாங்குவது பாவம்’ என்று தெரிவிக்கின்றனர்.