மைத்திரி மற்றும் கோட்டாபய ஆகியோரை கொலை செய்யவிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் பணிக்கு!
2018ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பணி இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும், விசாரணைகள் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலைமையினால் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அண்மையில் அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதுடன் அதற்கமைய அவரை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.