பிடியாணைக்கு அடி சறுக்குமா ?
பன்னாட்டு ஊடகங்களின் கடந்த வாரத் தலைப்புச் செய்திகளில் ஒன்று ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டினுக்கு எதிரான பிடியாணை.
நெதர்லாந்து நகரான ஹேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
ஒரு வருடத்தையும் கடந்து நடைபெற்றுவரும் உக்ரைன் போரில், உக்ரைனில் உள்ள சிறார்களை சட்டவிரோதமாக(?) ரஸ்யாவுக்குக் கொண்டு சென்றதான குற்றச்சாட்டில் அதிபர் புட்டின் மற்றும் ரஸ்ய சிறார் உரிமைகள் ஆணையர் மரியா ல்வோவா-வெலோவா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ரோம் சாசனத்தின் பிரிவு 8இன் கீழ் குறித்த தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெனீவா பிரகடனத்தை மிக மோசமாக மீறுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்’களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறும் தீர்ப்பில், ‘உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிறார்களைக் கைது செய்து நாடு கடத்திய குற்றத்திற்காக’ பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் உரிய வாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்ட பிரதேசங்கள் என்பது ரஸ்யாவின் நிலைப்பாடு. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் தனது நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மக்களை இடமாற்றுவது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும்.
அது மாத்திரமன்றி, ரஸ்யாவுடன் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சொந்தப் பாதுகாப்புக் கருதியே அவர்கள் ரஸ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பது ரஸ்யத் தரப்பு வாதம்.
அத்தோடு, இவ்வாறு மக்களை அழைத்துச் செல்வதை ரஸ்யா மறைமுகமாகவும் செய்யவில்லை. பகிரங்கமாகவே செய்தது. உக்ரைன் சார்பு தாக்குதல் குழுவினரிடம் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் கடமை தனக்கு உள்ளதாலேயே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரஸ்யா கூறுகிறது. மேலும், அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில், உரிய வசதிகளுடனேயே தங்க வைக்கப்பட்டும் உள்ளனர்.
ஒரு வழக்கிற்கு ஆதாரமாக அமைவது குற்றச்சாட்டு மாத்திரம் அல்ல, மாறாக ஆதாரங்களே. புட்டினுக்கு எதிரான குறித்த வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படுவது வெறும் பத்திரிகைச் செய்திகளும், அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு(?)மே.
உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே ரஸ்யாவுக்கு எதிரான பரப்புரைகள் மேற்குலக ஊடகங்களில் ஆரம்பமாகி இருந்தமையை உலகறியும். அது இன்றுவரை தொடரவே செய்கிறது. நியு யோர்க் ரைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் உக்ரைன் சிறார்கள் ரஸ்யாவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட(?) செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வெளியிட்டு இருந்தன.
பெப்ரவரி மாதத்தில் யேல் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் 6,000 சிறார்கள் ரஸ்யாவுக்குக் கடத்தி(?)ச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர்களுக்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்டுள்ள ‘மோதல் கண்காணிப்பகம்’ என்ற நிறுவனமே இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை வழங்கியிருந்தது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ‘மோதல் மற்றும் சீராக்குதல் அலுவலகம்’ குறித்த கண்காணிப்பகத்தை ஆரம்பிப்பதற்கான அடிப்படை நிதியான 6 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பாதிக்கக்கூடிய மோதல்களை எதிர்வுகூறுதல், தடுத்தல் மற்றும் எதிர்வினையாற்றுதல் ஆகியவையே மோதல் மற்றும் சீராக்குதல் அலுவலகத்தின் பணிகள் ஆகும்.
மேலுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிந்து கொள்ளும் போது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியை ஊகித்துக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல.
அது மாத்திரமன்றி, ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படுபவர் தனது தரப்பு நியாயத்தைக் கூறும் வாய்ப்பு வழங்கப்பட்டேயாக வேண்டும். ஆனால், குறித்த வழக்கில் அதற்கான வாய்ப்பு ரஸ்யாவுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
உலகானது நியாயத்தின் அச்சில் அன்றி நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. 6,000 வரையான சிறார்களை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருப்பது ரஸ்யா மீதான மிகப் பாரிய குற்றச்சாட்டாக இருக்குமானால் இதைவிடப் பாரிய குற்றங்களை நிகழ்த்தியோருக்கும், இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்போருக்குமான தண்டனை ஏன் இதுவரை வழங்கப்படவில்லை என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
1948இல் உருவாக்கம் பெற்ற நாள் முதலாகவே பாலஸ்தீன மக்களை அழித்தொழிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்துச் செயற்படும் இஸ்ரேல் ஏன் இதுவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை. சிறார்கள், இளையோர், முதியோர் என்றில்லாமல் நிதமும் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவது யார்?
வியட்நாம் மண்ணிலே அமெரிக்கா நிகழ்த்திய கொடூரங்கள் எத்தனை? கொன்றொழிக்கப்பட்ட சிறார்கள் எத்தனை பேர்? ஈராக் போரிலே இலட்சக் கணக்கான சிறார்கள் மாண்டு போனார்களே. அவர்களுக்கான நீதி எங்கே?
ஈராக் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக சற்றொப்ப 5 இலட்சம் சிறார்கள் பலியானதாக 1996இலே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதில் “அந்த விலை நியாயமானது” என்று அப்போதைய ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் மெடலின் அல்பிரைற் கூறினாரே அதன் விளக்கம் என்ன? அந்த 5 இலட்சம் சிறார்களுக்கான நீதியை வேண்டுவது யார்?
‘பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு இதைவிடவும் எடுத்துக்காட்டுகளுக்கு எங்கே போவது?
புட்டினுக்கு எதிரான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பு எந்தவித சட்ட வலுவும் அற்றது. ஏனெனில், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றை இதுவரை ரஸ்யா ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கவில்லை. மறுபுறம், புட்டினைக் கைது செய்வதோ, நீதிமன்றின் முன் நிறுத்துவதோ – தற்போதைய நிலையில் – சாத்தியமான ஒரு விடயமாகத் தெரியவில்லை.
அதேவேளை, குறித்த தீர்ப்பு வெளியாகி உள்ள காலச்சூழல் மிகுந்த கவனிப்புக்கு உரியது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் திர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ள சீனா, அது தொடர்பில் ரஸ்யாவுடன் பேசி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக சீன அரசுத் தலைவர் ஸி சின்பிங் ரஸ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு உள்ளார்.
சூடானின் முன்னாள் அதிபர் ஒமர் ஹசான் அல்-பசீர் போல சேர்பிய முன்னாள் அதிபர் ஸ்லோபடோன் மிலோசவிக் போல புட்டினையும் ஒருவராகச் சித்திரிப்பதும், சீனா முன்னெடுக்கும் சமாதான முன்முயற்சி தொடர்பில் ஸி சின்பிங்கை எச்சரிப்பதும் புட்டின் மீதான பிடியாணை அறிவிப்பின் நோக்கங்களாக இருக்க முடியும். அது மாத்திரமன்றி புட்டினை குற்றவாளியாகச் சித்தரிப்பதன் ஊடாக, ரஸ்யாவில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் திட்டமும் நேட்டோ தலைமையிலான மேற்குலகிடம் உள்ளது ஒன்றும் இரகசியமான செய்தியல்ல.
போர்முனையில் அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்துவரும் உக்ரைன் எக்காரணத்தைக் கொண்டும் பேச்சுவார்த்தைக்கு இணங்கிவிடக் கூடாது என்பதில் மேற்குலகம் கரிசனையாக உள்ளது. உக்ரைனைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ள இதை விடவும் பல நாடகங்களை அரங்கேற்ற மேற்குலகம் தயாராகவே இருக்கிறது.
இத்தனைக்கும், ரோம் சாசனத்தினை இன்னமும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்னும் செய்தியை அமெரிக்கா எப்போதோ பகிரங்கப்படுத்தியும் விட்டது. இந்நிலையில் புட்டினுக்கு எதிரான தீர்ப்பைக் கொண்டாடுவதில் என்ன தார்மீகம் உள்ளது எனப் புரியவில்லை.
நிகழ்காலத்தில் அமெரிக்கா கட்டமைக்க முயலும் ஒற்றை மைய உலகில் உலக மன்றங்கள் யாவும் அமெரிக்காவின் சொல் கேட்கும் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளன என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே. அந்த வரிசையில் தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் இணைந்திருப்பது காலக்கொடுமை.