அரசியல் பேச்சுக்கள் தற்போது தரம் தாழ்ந்து வருவதாக உச்சநீதிமன்றம் கவலை!

அரசியல் பேச்சுக்கள் தற்போது தரம் தாழ்ந்து வருவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பேரணி நடத்த அனுமதி கோரி, இந்து சமாஜ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம். ஜோசப், பிவி. நாகரத்னா அமர்வு விசாரித்து வருகிறது. புதன் கிழமை நடைபெற்ற விசாரணையின் போது அரசியல் பேச்சுக்கள் தற்போது தரம் தாழ்ந்து வருவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
நேரு, வாஜ்பாய் போன்ற மிகப்பெரிய பேச்சாளர்களின் பேச்சை கேட்க மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள் என குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது அந்த இடத்தை சிறிய குழுக்களை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருப்பதாக கூறினர். அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
சகிப்பின்மை என்பது அறிவு மற்றும் கல்வி இல்லாததால் வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதன் முலம் கண்ணியமே உடைபடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுபான்மையினரை சகோதர்கள் போல நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அவர்களை இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட இந்து சமாஜின் வழக்கறிஞர் மத பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி பிவி. நாகரத்னா, மத பேரணி நடத்த உரிமை உண்டு என்ற போதிலும் பேரணியில் பங்கேற்பவர்கள் என்ன செய்கிறார்கள் என வினவினார். நமது முன்னோர்கள் கட்டி காத்த சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதே, சகிப்புத்தன்மை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 28- ஆம் தேதி ஒத்திவைத்தனர்.