2024ஆம் ஆண்டு அதிக இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

நெட்வொர்க்18-ன் ரைசிங் இந்தியா மாநாட்டின் முதல் நாளான நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சென்ற ஆண்டுகளைவிட அதிக இடங்களைப் பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் எனத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ‘ஒருங்கிணைந்த எதிர்கட்சி’ முறியடிக்கும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இவை வெறும் டிஆர்பி-க்களை அதிகரிக்க வேண்டுமானால் உபயோகமாகலாம் என்றும் கூறினார்.

‘சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்ட்ர சமிதி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் என இந்த நான்கும் மோடி vs ரெஸ்ட் பார்முலாவின் கீழ் ஒன்று சேரும் என்று வைத்துக்கொள்வோம்; சந்திரசேகர் ராவ் உத்தரபிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன வித்தியாசம் ஏற்படும்? தெலுங்கானாவில் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினால், மாற்றம் வருமா? அல்லது அகிலேஷ் யாதவ் வங்காளத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினால், அது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?’ என்று அமித்ஷா வினவினார்.

மேலும், இந்த கட்சிகளும் தலைவர்களும் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பாஜகவை எதிர்த்துப் போராடுகிறார்கள். இப்படியான ஒற்றுமைக்கு அர்த்தம் இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் தலைவர்களாகக் கருதுவதில்லை, ஒருவருக்கு ஒருவர் எந்த இடங்களையும் ஒதுக்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்று அமித்ஷா மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, 2019ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். ‘கடந்த முறை மேற்கு வங்கத்தில் எங்களின் தொகுதி எண்ணிக்கை உயரும் என்று நான் கூறியபோது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் அதை செய்து காட்டினோம். ஒடிசா மற்றும் தெலுங்கானாவிலும் எங்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். எங்கள் கட்சி களத்தில் செயல்படுகிறது. கூடுதலாக, பிரதமர் மோடியின் ஒளி இந்தியாவின் கடைசி கிராமத்திலிருந்து தலைநகர் டெல்லி வரை பரவியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை’ என்று அமித்ஷா கூறினார்.

தென் மாநிலங்களைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ தமிழ்நாட்டில் பாஜக கட்டமைப்பு வலுவின்றி உள்ளது. அதை சரிப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். முன்னேற்றமும் கண்டுள்ளோம். பல தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. எங்கெல்லாம் பாஜக வலுகுறைந்துள்ளதோ, அங்கு எங்களது கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.