இப்போதைக்கு எந்தத் தேர்தலுக்கும் அரசு தயார் இல்லை! – இராஜாங்க அமைச்சரின் பதிலில் வெளிப்படை.
“எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்க வேண்டும்.”
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தேர்தல்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா?
பதில்:- அப்படியொரு தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. அரசு முன்னுரிமை கொடுப்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குத்தான். இதை நாம் வேகமாகச் செய்து முடிப்போம்
கேள்வி:- நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறியுள்ளாரே…?
பதில்:- அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசைப் பொறுத்தவரை அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.
கேள்வி:- அப்படியாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
பதில்:- அதைத் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்கவேண்டும் – என்றார்.