யாழ். ஊடகவியளாளர் நிமலராஜன் கொலை தொடர்பாக பிரிட்டனில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பிரதேச ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் 30 ஆம் திகதி பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதுடைய இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பகுதி ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது வீட்டினருகே விட்டுச் சென்ற துவிச்சக்கரவண்டியை வைத்து விசாரணை செய்த யாழ்.பொலிசார் இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை கைது செய்திருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றமற்றோர் என நீதிமன்றம் விடுதலை செய்தது.
இவ்வாறான பின்னணியில் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.