மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி (படங்கள்)
இலங்கையின் முன்னாள் சபாநாயகரும் அமைச்சரவை அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு சபாநாயகர் – மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (30) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக, தூதுவர்கள், பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தலைமையிலான பொதுச் செயலாளர் குழு, பாராளுமன்றத்தின் தலைமைச் செயலக ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய இறுதி ஊர்வலம் நேற்று காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தின் பிரதான படிகளை வந்தடைந்தது. மற்றும் தலைமை அதிகாரியும் பிரதிப் பொதுச் செயலாளருமான திருமதி குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் சார்ஜன்ட் மேஜர், பிரதி சார்ஜன்ட் மேஜர், உதவி சார்ஜன்ட் மேஜர் ஆகியோருக்கு முன்பாக சிவப்பு கம்பளத்தில் பூதவுடல் சுமந்து செல்லப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ள விசேட விழா மண்டபத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் அறிக்கையையும் பதிவு செய்தனர். அதனையடுத்து, பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், பாராளுமன்ற செயலகம் மற்றும் ஊழியர்கள், அதிதிகள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.