புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மனோ அணியினரும் போர்க்கொடி!
”உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது ஜனாதிபதிக்குக் கடுமையான – கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை. எனவேதான் அதனைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனச் சொல்வதைவிட, அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கின்றது.
இந்தப் புதிய சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான – கொடுமையான அதிகாரத்தைக் கொடுக்கின்றது. இது தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளைத் தடை செய்யலாம். அது உறுப்பினர்களுக்குப் பாதகமாக அமையும். மக்களுக்குப் பிரசாரம் செய்யவும், ஒன்றுகூட முடியாத சூழ்நிலையும் உருவாகும்.” – என்றார்.